Tuesday, April 15, 2014

'ரோபோ' நீர்மூழ்கி கப்பலின் செயல்பாடு தோல்வி

பெர்த்: காணாமல் போன மலேசிய விமானத்தை, தேடுவதற்காக, பயன்படுத்தப்பட்ட, 'ரோபோ' நீர்மூழ்கி கப்பலின் செயல்பாடு தோல்வியடைந்துள்ளது.


மலேசியாவின், கோலாலம்பூர் நகரிலிருந்து, கடந்த மாதம், 8ம் தேதி, சீனாவுக்கு புறப்பட்ட விமானம், மாயமானது. 239 பேருடன் சென்ற இந்த விமானம், இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கியிருக்கலாம், என, சந்தேகிக்கப்படுகிறது. இவ்விமானத்தில், சென்னை பெண் உட்பட, ஐந்து இந்தியர்களும், கனடா நாட்டு தமிழர் ஒருவரும் பயணித்துள்ளனர். மலேசிய விமானத்தை தேடும் குழுவின் தலைவரான, ஆஸ்திரேலிய மாஜி கடற்படை தளபதி, அங்கஸ் ஹூஸ்டன் கூறியதாவது: விமானத்தின், கருப்பு பெட்டியில் உள்ள பேட்டரி காலாவதியாகி விட்டதால், அதிலிருந்து வரும் சிக்னல் மறைந்து விட்டது. இதனால், அமெரிக்காவின், 'ப்ளுபின்-21' என்ற, 'ரோபோ' நீர்மூழ்கி கப்பலை ஆழ்கடலில் செலுத்தி, விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த ரோபோ நீர்மூழ்கி கப்பல், 4.5 கி.மீ., ஆழத்துக்கு மேல் செல்லும் திறன் அற்றதாக உள்ளது. ஆறு மணி நேர பயன்பாட்டுக்கு பிறகு, இந்த ரோபோ நீர்மூழ்கி கப்பலை வாபஸ் பெற்று விட்டோம். தற்போது, 62 ஆயிரம் சதுர கி.மீ., கடற்பரப்பில், விமானத்தை தேடி வருகிறோம். பல நாடுகளின், 11 கப்பல்களும், 11 விமானங்களும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. மாயமான விமானத்துக்கான தடயம் கிடைக்க, இன்னும் இரண்டு மாதங்கள் கூட ஆகலாம். இவ்வாறு ஹூஸ்டன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment