Saturday, May 31, 2014

சேவக் ‘சூப்பர்’ சதம்: பைனலில் பஞ்சாப் அணி

சேவக் ‘சூப்பர்’ சதம்: பைனலில் பஞ்சாப் அணி


sehwag, ipl, punjab
 
மும்பைசேவக் விஸ்வரூபம் எடுத்தால் எந்த பவுலரும் தாக்குப்பிடிக்க முடியாது என்பது மீண்டும் நிரூபணமானது. இவரது அதிரடி சதம் கைகொடுக்க, ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு பஞ்சாப் அணி முதன்முறையாக முன்னேறியது. நேற்று நடந்த ‘பிளே–ஆப்’ இரண்டாவது தகுதிச் சுற்றில், சொதப்பிய சென்னை அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து,
வெளியேறியது. சென்னை தரப்பில் ரெய்னாவின் அதிவேக அரைசதம் வீணானது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஏழாவது ஐ.பி.எல்., தொடருக்கான ‘பிளே–ஆப்’ சுற்றின் இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில், சென்னை, பஞ்சாப் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
சேவக் அபாரம்:
பஞ்சாப் அணிக்கு சேவக், மனன் வோரா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. ‘பழைய’ சேவக்காக எழுச்சி கண்ட இவர், ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தார். சென்னை பந்துவீச்சை துவம்சம் செய்த இவர், நெஹ்ரா ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்த போது வோரா (34) வெளியேறினார். மேக்ஸ்வெல் (13) ஏமாற்றினார். அசத்தலாக ஆடிய சேவக், 50வது பந்தில் தனது 2வது ஐ.பி.எல்., சதத்தை பதிவு செய்தார். ஜடேஜா வீசிய 18வது ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த சேவக், 58 பந்தில் 122 ரன்கள் (8 சிக்சர், 12 பவுண்டரி) எடுத்து அவுட்டானார். கேப்டன் ஜார்ஜ் பெய்லி (1) போல்டானார். மில்லர் (38) ‘ரன்–அவுட்’ ஆனார். விரிதிமன் சகா (6) சொதப்பினார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்தது. ஜான்சன் (1) அவுட்டாகாமல் இருந்தார்.
ரெய்னா விளாசல்:
கடின இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு டுபிளசி (0) முதல் ஓவரில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா, துவக்கத்தில் இருந்தே அதிரடியாக ரன் சேர்த்தார். சந்தீப் சர்மா வீசிய ஆட்டத்தின் 2வது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த இவர், ஜான்சன் வீசிய 4வது ஓவரில் 2 சிக்சர் விளாசினார். பின், சந்தீப் சர்மா பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரெய்னா, 16 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்த போது ஸ்மித் (7) போல்டானார்.
மெக்கலம் ஏமாற்றம்:
தொடர்ந்து அதிரடி காட்டிய ரெய்னா, பர்விந்தர் அவானா வீசிய 5வது ஓவரில் 2 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 33 ரன்கள் ரன்கள் எடுக்க, சென்னை அணி 6 ஓவரில் 100 ரன்களை எட்டியது. இதையடுத்து வெற்றி பெற வாய்ப்பு இருந்தது.
திருப்புமுனை:
இந்த நேரத்தில் ஜார்ஜ் பெய்லியின் துல்லிய ‘த்ரோவில்’ ரெய்னா (87 ரன், 25 பந்து, 6 சிக்சர், 12 பவுண்டரி) துரதிருஷ்டவசமாக ‘ரன்–அவுட்’ ஆக, போட்டியில் திருப்புமுனை ஏற்பட்டது. படுமந்தமாக ஆடிய பிரண்டன் மெக்கலம் (11) 2வது ரன்னுக்கு ஓடிய போது ‘ரன்–அவுட்’ செய்யப்பட்டார்.
ஆட்டத்தின் 13வது ஓவரை வீசிய அவானா, ரவிந்திர ஜடேஜா (27), டேவிட் ஹசி (1) ஆகியோரை அவுட்டாக்கி இரட்டை ‘அடி’ கொடுத்தார். அஷ்வின் (10) ஏமாற்றினார். அடுத்து வந்த கேப்டன் தோனி நிதானமாக ஆடினார். இவர், அவானா வீசிய ஆட்டத்தின் கடைசி பந்தை சிக்சருக்கு அனுப்ப, சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 202 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. தோனி (42), மோகித் சர்மா (1) அவுட்டாகாமல் இருந்தனர். பஞ்சாப் சார்பில் பர்விந்தர் அவானா 2 விக்கெட் வீழ்த்தினார்.
எல்லாமே ஒன்று
பஞ்சாப் அணி 11வது ஓவரின் முடிவில், 1 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது (111/1, 11 ஓவர்) சற்று வித்தியாசமாக இருந்தது.
இரண்டாவது சதம்
நேற்று அபாரமாக ஆடிய பஞ்சாப் அணியின் சேவக் (122 ரன்), ஐ.பி.எல்., அரங்கில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். முன்னதாக 2011ல் டில்லி அணிக்காக விளையாடிய இவர், டெக்கான் அணிக்கு எதிராக 119 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் கில்கிறிஸ்ட், முரளி விஜய், டேவிட் வார்னர் ஆகியோருடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டார்.
* இது, இம்முறை பதிவு செய்யப்பட்ட இரண்டாவது சதம். முன்னதாக மும்பை அணியின் லெண்டில் சிம்மன்ஸ் (100*), பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்தார்.
* தவிர இது, ஐ.பி.எல்., வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட 30வது சதம். இதில் அதிகபட்சமாக பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் 4 சதம் அடித்துள்ளார்.
நான்காவது முறை
நேற்று 226 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி, இத்தொடரில் நான்காவது முறையாக 200 ரன்களுக்கு மேல் எடுத்தது. இதில் மூன்று முறை சென்னைக்கு (231, 226, 206 ரன்கள்) எதிராகவும், ஒரு முறை (211) ஐதராபாத்துக்கு எதிராகவும் இம்மைல்கல்லை எட்டியது. இதன்மூலம் இம்முறை அதிக ரன்கள் எடுத்த அணிகள் வரிசையில் முதல் நான்கு இடங்களில் பஞ்சாப் அணி உள்ளது.
அதிவேக அரைசதம்
அபாரமாக ஆடிய சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா, 16 பந்தில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் அதிவேக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். ஐதராபாத்துக்கு எதிராக 15 பந்தில் அரைசதத்தை பதிவு செய்த கோல்கட்டா அணியின் யூசுப் பதான், முதலிடத்தில் உள்ளார்.
‘ஹாட்ரிக்’ தோல்வி
இம்முறை சென்னை அணியால் பஞ்சாப்பை வீழ்த்த முடியவில்லை. லீக் சுற்றில் இரண்டு முறை தோற்றது. நேற்றும் சொதப்பி மூன்றாவது தோல்வியை பெற்றது.
ரெய்னா ‘ரன்–அவுட்
நேற்றைய போட்டியில், ஒரு கட்டத்தில் சென்னை அணி 6 ஓவரில் 100 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அப்போது ரெய்னா, 25 பந்தில் 87 ரன்கள் எடுத்திருந்தார். கரண்வீர் சிங் வீசிய 7வது ஓவரின் முதல் பந்தை தட்டிவிட்ட பிரண்டன் மெக்கலம், தேவையில்லாமல் ஒரு ரன்னுக்கு ஓடினார். துல்லியமாக பீல்டிங் செய்த கேப்டன் ஜார்ஜ் பெய்லி, பந்தை சுரேஷ் ரெய்னா ஓடிய திசையில் இருந்த ‘ஸ்டெம்பை’ நோக்கி எறிந்து ‘ரன்–அவுட்’ செய்தார். இது, போட்டியில் திருப்பமாக அமைந்தது. பின் ஆதிக்கம் செலுத்திய பஞ்சாப் அணி எளிதில் வெற்றி பெற்றது
விமர்சனத்துக்கு பதிலடி:
சதம் அடித்தது குறித்து பஞ்சாப் அணியின் சேவக் கூறுகையில்,‘‘ சில போட்டியில், குறைவான ரன்களில் அவுட்டாகி ‘பெவிலியனுக்கு’ திரும்பியபோது, என் மனைவி போனில் தொடர்பு கொண்டார். எனது மகனின் நண்பர்கள் நான் சரியாக விளையாடவில்லை என அவனை கேலி செய்வதாக கூறினார். அப்போது, இன்னும் சில போட்டி உள்ளது. பொறுத்திருங்கள் என அவருக்கு பதில் தெரிவித்தேன். தவிர, பஞ்சாப் அணிக்கு என்னால் ஒரு போட்டியிலாவது வெற்றி கிடைக்க வேண்டும் என விரும்பினேன். கவனத்துடன் விளையாடி, சதமும் பதிவு செய்தேன்,’’ என்றார். 
இரண்டாவது இந்தியர்
நேற்றைய போட்டியில் சதம் அடித்த சேவக், ஐ.பி.எல்., தொடரில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம், ஐ.பி.எல்., தொடரில் 2 சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன், முரளி விஜய் இந்த சாதனையை பெற்றிருந்தார். 
கைவிட்ட வெளிநாட்டு வீரர்கள்
நேற்று சென்னை அணியின் டுவைன் ஸ்மித் (7), டுபிளசி (0), பிரண்டன் மெக்கலம் (11),  டேவிட் ஹசி (1) ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேறி ஏமாற்றினர். அதேவேளையில் பஞ்சாப் அணிக்கு இந்திய வீரரான சேவக் சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.
தோனி செய்த தவறு
முக்கியமான போட்டியில் ‘டாஸ்’ வென்ற தோனி, முதலில் ‘பேட்டிங்கை’ தேர்வு செய்ய தவறினார். பிரதான பவுலர்களை சேவக், வெளுத்து வாங்கிய நிலையில் ரெய்னா, டுபிளசி, டுவைன் ஸ்மித் போன்ற பகுதிநேர பந்துவீச்சாளர்களை பயன்படுத்தாமல் ஏமாற்றம் அளித்தார்.
‘பாலிவுட்’ பைனல்
 நாளை பெங்களூருவில் நடக்கும் பைனலில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் கோல்கட்டா அணி, நடிகை பிரித்தி ஜிந்தாவின் பஞ்சாப் அணியை எதிர் கொள்கிறது. 

Saturday, May 24, 2014

மதிப்பெண் குவிப்பால் கல்வித்தரம் மேம்படுகிறதா?

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்ச்சி சதவீத புள்ளியும், 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீத புள்ளியும், 90ஐ தாண்டி, சாதனை படைத்துள்ளது. மாணவர்கள், மதிப்பெண்களை வாரி குவித்துள்ளனர். நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், 465 பேர், மாநில அளவில், முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். அறிவியலில், 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். சமூக அறிவியல், 'சென்டமும்' 26 ஆயிரத்திற்கும் அதிகமாக வந்துள்ளது.
தேர்ச்சி சதவீத புள்ளி அதிகரிப்பும், மாணவர்கள், அதிகளவில், மதிப்பெண் குவித்திருப்பதும், பலரின் புருவங்களையும் உயர்த்த வைத்துள்ளது. இந்த மதிப்பெண் குவிப்பால், தமிழகத்தின் கல்வித்தரம் மேம்பட்டுள்ளதாக, கல்வித்துறை வட்டாரம் கருதுகிறது.

இது குறித்து, கல்வியாளர், எஸ்.எஸ்.ராஜகோபாலன் கூறியதாவது: ஆசிரியரும், மாணவர்களும் கடினமாக உழைத்துள்ளனர். இதனால், தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. மதிப்பெண்ணும், அதிகமாக வாங்கி உள்ளனர். ஆனாலும், கல்வித்தரம் மேம்பாடு அடைந்துள்ளது என்பதற்கு, இதை ஒரு காரணமாக கருத முடியாது. பாட புத்தகத்தில் உள்ள பகுதியில் இருந்து தான், கேள்வி கேட்கின்றனர். அதனால், பாட புத்தகத்தை, அப்படியே, மாணவர்கள், மனப்பாடம் செய்து, தேர்வை எழுதுகின்றனர். இதனால், மதிப்பெண் அதிகரிக்கும்; தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கத்தான் செய்யும். உண்மையான கல்வித்தர மேம்பாட்டுக்கு, தேர்வு முறையை மாற்ற வேண்டும். 20 சதவீத கேள்விகளை, பாட புத்தகத்திற்கு வெளியே இருந்து கேட்க வேண்டும். இந்த கேள்விகள், மாணவர்களின் சிந்தனையை தூண்டுவதாக இருக்க வேண்டும். இந்த கேள்விகள், பாட பொருள் சார்ந்ததாக இருக்கலாம். ஆனால், கேள்வி மட்டும், அதை சார்ந்து, மாணவர்கள் சிந்தித்து எழுதும் வகையில் இருக்க வேண்டும். இதுபோன்ற ஒரு முறை வந்தால், ஆசிரியர்கள், விரிவாக, பல கோணங்களில், பல விஷயங்களை, மாணவர்களுக்கு கற்றுத் தருவர். மாணவர்களும், புதிய முறையில் சிந்தித்து, தேர்வெழுதும் திறனை பெறுவர். தற்போது, அதற்கு வாய்ப்பு இல்லை. 'அ.தி.மு.க., ஆட்சியில், கல்வித்துறை சாதனை' என, இந்த கட்சியினர் கூறுவர். உடனே, 'இந்த சாதனைக்கு, நாங்கள் கொண்டு வந்த, சமச்சீர் கல்வி திட்டம் தான் காரணம்' என, தி.மு.க.,வினர் கூறுவர். இவ்வாறு, ராஜகோபாலன் கூறினார்.

Wednesday, May 21, 2014

நைஜீரியாவில் கார் குண்டு வெடிப்பு: 118பேர் பலி

நைஜர்:நைஜீரியாவின் மத்திய பகுதியான ஜோஸ் நகரில் அடுத்தடுத்து இரண்டு கார் குண்டுகள் வெடித்ததில் 118 பேர் உடல் சிதறி பலியானார்கள்.நியூ அபுஜா மார்க்கெட் பகுதியில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு முதல் தாக்குதல் நடந்தது. பின்னர் மீண்டும் அரைமணி நேரத்தில் இரண்டாவது தாக்குதல் நடந்தது.நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்என அஞ்சப்படுகிறது.

Thursday, May 15, 2014

மூத்த மகனுக்கு காந்தி எழுதிய கடிதம் ஏலத்துக்கு வருகிறது

மூத்த மகனுக்கு காந்தி எழுதிய கடிதம் ஏலத்துக்கு வருகிறது


லண்டன்,
மகாத்மா காந்தி தனது மூத்த மகன் ஹரிலாலுக்கு எழுதிய கடிதம் அடுத்த வாரம் ஏலத்திற்கு வருகிறது. தனது மகன் விவகாரத்தில் மகாத்மா காந்தி வருத்தத்தில் எழுதிய மூன்று கடிதங்கள் ஏலத்திற்கு வருகிறது. காந்தி 1935ம் ஆண்டு எழுதிய இந்த கடிதங்களை ஏலம் விடும் ஸ்ரோப்ஷைரில் உள்ள பிரபல நிறுவனம், கடிதங்கள் 50,000 பவுண்ட் முதல் 60 ஆயிரம் பவுண்ட் வரையில் ஏலம் போகும் என்று நம்புகிறது.
காந்தியின் மூத்த மகன் ஹரிலால். ஹரிலால் மதுவுக்கு அடிமையாகி பல்வேறு தவறுகளை செய்ததால் தந்தையின் அதிருப்தியை சம்பாதித்தவர். பின்னர் தனது மகனே இல்லை என்று காந்தி அவரை தள்ளி வைத்ததாகவும், அதிகாரப்பூர்வ விடுதலை பத்திரத்தை அளித்ததாகவும் கூறப்படுகிறது.
காந்தியின் மூத்த மகன் ஹரிலாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் “நாட்டின் விடுதலையை விட, உனது பிரச்சனை எனக்கு மிகவும் கடினமான பிரச்சனையாக உள்ளது என்பது உனக்கு தெரிந்திருக்கும்”. "மனு(ஹரிலாலின் மகள்) உன் ஆபத்தான விஷயங்களை என்னிடம் கூறியுள்ளார். மனுவை நீ பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளாள். இதனால் காயம் அடைந்த மனு மருத்துவ சிகிச்சையும் பெற்றுள்ளார்" என்று வருத்தத்துடன் எழுதியுள்ளார். மகாத்மா காந்தியுடன் சபர்மதி ஆசிரமத்தில் மனு தங்கவந்தபோது இந்த தகவலை அவரிடம் கூறியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"இந்த கடிதங்கள் அனைத்து குஜராத் மொழியில் எழுதப்பட்டுள்ளது. தற்போது நல்ல நிலையில் உள்ளது. காந்தியின் வம்சாவளி வழியாக அவரது குடுபத்தின் ஒரு கிளையில் இருந்து தற்போது வெளியே வந்துள்ளது. அவர்கள் இந்த கடிதத்தை இதற்கு முன்னதாக பொதுஇடத்தில் வைத்து பார்த்திருக்க மாட்டார்கள் என்று கருதுகிறோம். தற்போது காந்தி மற்றும் அவரது மகனுக்கு இடையில் இருந்த வருத்தம் நிறைந்த உறவு குறித்து அவர்கள் குறிப்பிடத்தக்க புதிய தகவல்களை கொடுத்துள்ளனர்"  என்று கடிதங்களை ஏலம் விட உள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம்


நியூயார்க்,
உலகின் விலைமதிப்பு மிக்க வீடுகளின் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக லண்டனிலுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் வீடு இடம்பெற்றுள்ளது.
4 லட்சம் சதுர அடிகள் பரப்பளவில் 27 மாடிகளை கொண்ட முகேஷ் அம்பானி தன்னுடைய வீட்டிற்கு அட்லாண்டிக் கடலில் உள்ள மர்மத்தீவான 'அண்டிலியா' வின் பெயரை சூட்டியுள்ளார். இந்த வீட்டின் மதிப்பு 1 லிருந்து 2 பில்லியன் டாலர் வரை இருக்கும் என 'போர்ப்ஸ்' மதிப்பிட்டுள்ளது. அது இந்திய மதிப்பில் 12 ஆயிரம் கோடியாகும்.

    27 மாடிகள் கொண்ட அண்டிலியாவில் 6 மாடிகள் கார்பார்க்கிங் வசதிக்காகவும், ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக 3 ஹெலிபேடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வீட்டில் 600 பணியாளர்கள் வேலை செய்கின்றனர். அமெரிக்காவின் சிகாகோ நகர கட்டிடக்கலை நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட அண்டிலியா 8 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் வந்தாலும் தாங்கக்கூடிய சக்தி கொண்டது.

Wednesday, May 14, 2014

துருக்கி நிலக்கரி சுரங்க விபத்தில் 201 பேர் உயிரிழப்பு- 300 பேர் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பு

துருக்கி நிலக்கரி சுரங்க விபத்தில் 201 பேர் உயிரிழப்பு- 300 பேர் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பு


மீட்பு பணியினர் அவர்களை மீட்க்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்த ஏராளமானோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் சுரங்கத்தில் ஏற்பட்ட மின்கசிவே தீப்பிடிக்க காரணம் என்று தெரியவந்துள்ளது.

Monday, May 12, 2014

துபாயில் விபத்து : 10 இந்தியர்கள் உட்பட 15 பேர் பரிதாப பலி

துபாயில் விபத்து : 10 இந்தியர்கள் உட்பட 15 பேர் பரிதாப பலி


துபாய்: துபாயில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது வேகமாக வந்த பஸ் மோதியதில் 10 இந்தியர்கள் உட்பட 15 பேர் உடல் நசுங்கி இறந்தனர். துபாயில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இந்தியா மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த 27 ஊழியர்கள் ஒரு மினி பஸ்சில் நேற்று முன்தினம் ஏறி ஜெபெல் அலி பகுதியில் உள்ள இடத்துக்கு வேலை பார்க்க சென்றனர். அந்த பஸ் எமிரேட்ஸ் சாலை வழியாக சென்ற போது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

இதில் அந்த பஸ் அப்பளம் போல நொறுங்கியது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பஸ் தகடுகள் வெட்டப்பட்டு, உள்ளே இருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.  பஸ்சுக்குள் சிக்கி இறந்துகிடந்த 15 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. அவர்களில் 10 பேர் இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  5 பேர் வங்க தேசத்தை சேர் ந்தவர்கள். பஸ்சுக்குள் சிக்கி படுகாயமடைந்தவர் களை அருகில் உள்ள மரு
த்துவமனைக்கு அனு ப்பி வைக்கப்பட்டனர்.

ரூ.200 கோடியை திருப்பி தரும் "ஆப்பிள்'

வாஷிங்டன் : உலகப் புகழ்பெற்ற, "ஆப்பிள்' நிறுவனம், தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு, 200 கோடி ரூபாயை திருப்பி அளிக்கிறது. ஆப்பிள் நிறுவன மொபைல் போன்களை பயன்படுத்தும் குழந்தைகள், தங்களுக்குத் தேவையான மென்பொருட்களை, அதன், "ஆப் ஸ்டோரில்' இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர். இதற்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு கட்டணம் வசூலிப்பதை, வாடிக்கையாளர்கள், அமெரிக்காவின் மத்திய வர்த்தக ஆணையத்திடம் புகார் அளித்தனர். அந்தப் புகாரில், குழந்தைகள் தங்களுடைய அனுமதியின்றி, மென்பொருட்களை வாங்குவதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து, வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட கட்டணத் தொகையை திருப்பித் தர நிறுவனம் ஒப்புக்கொண்டது. இந்த மொபைல் போன்களில், வாடிக்கையாளர்கள் தங்களுடைய பாஸ்வேர்டை பதிவு செய்தபின், 15 நிமிடங்களுக்கு, யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்; அந்த சமயத்தில், குழந்தைகள் வரம்பின்றி, தங்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்களை வாங்க முடியும்; இதுகுறித்து, வாடிக்கையாளர்களுக்கு, நிறுவனம் தெரிவிக்கவில்லை. இந்த மொபைல் போனை பயன்படுத்தும் குழந்தைகள், "கிட்ஸ்' ஸ்டோரில் இருந்து, 30 ஆயிரம் முதல் 1.60 லட்சம் ரூபாய் வரையுள்ள அப்ளிகேஷன்களை வாங்கியுள்ளனர். மத்திய வர்த்தக ஆணையத்திடம் புகார் அளித்துள்ள, ஒரு பெண்மணி, அவரது மகள் வாங்கிய விளையாட்டு அப்ளிகேஷனுக்காக, 1.60 லட்சம் ரூபாய் செலவிட்டதாகக் கூறியுள்ளார். கடந்த ஆண்டு முதல், வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகை, திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது; ஆப் ஸ்டோருக்காக, ஏறக்குறைய மூன்று கோடி வாடிக்கையாளர்களுக்கு, இமெயில் மற்றும் கடிதம் மூலம் தகவல் அனுப்பியுள்ளோம், என்று ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரி, டிம் குக் தெரிவித்து உள்ளார்.